திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை
செய்தி முன்னோட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தினை சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த 2019ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம்தேதி படுகொலை செய்யப்பட்ட இவர், மதமாற்றத்தினை குறித்து தட்டிக்கேட்டதன் காரணமாகவே படுகொலை செய்யப்பட்டார் என்று புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், இவரை கொலை செய்த வழக்கில் 18பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
என்ஐஏ விசாரித்து வரும் இவ்வழக்கில் இதுவரை 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 6 பேரினை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த 18பேர் மீதும் 5,000பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளநிலையில், இன்று(ஜூலை.,23)தமிழகத்தின் திருச்சி, கும்பகோணம், தஞ்சை, கோவை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை செய்துவருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
சோதனை
முன்னாள் PFI நிர்வாகியான அப்பாஸுக்கு என்ஐஏ சம்மன்
திருநெல்வேலியிலுள்ள எஸ்டிபிஐ.,கட்சி தலைவரான நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது.
அதேபோல் உசிலம்பட்டி அருகேயுள்ள காமராஜர் நகரினை சேர்ந்த ஜாகீர்உசேன், திருபுவனம் ஜின்னா, திருமங்கலக்குடி முகமதுநபீல், PFI முன்னாள் மாவட்ட தலைவரான குலாம் உசேன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
கோவை கோட்டைமேடு பகுதியில் PFI நிர்வாகியாக இருந்த அப்பாஸ் என்பவரது வீட்டில் காலை 6 மணிமுதல் நடத்தப்பட்ட சோதனையில், அவரது செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், 90,000பணத்தினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இன்று 12மணிக்கு கோவையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் அவர் ஆஜராகவேண்டும் என்று சம்மன் வழங்கியுள்ளநிலையில், மற்ற இடங்களில் சோதனைகள் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.