வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தலைநகர் சென்னையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் அனைத்து சுரங்க பாதைகளும் நீரில் மூழ்கியது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில், பால், குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில் மக்கள் இதனால் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது" என நேற்று தெரிவித்திருந்தார்.
#NoPanicBuying
இருப்பினும் இன்று பல இடங்களுக்கு பால் விநியோகம் தாமதமாக வந்தது. அதனால், பொதுமக்கள் வாங்கி சேமித்து வைக்கும் எண்ணத்துடன், தேவைக்கும் அதிகமாக வாங்கியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இணையத்தில், #NoPanicBuying என்ற ஹாஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மறுபுறம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழக அரசு ஏரியாவாரியாக வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளது. அதேபோல, பால், குடிநீரை போன்ற அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார்.
தலைமை செயலர் கூறியது என்ன?
"மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் பிற மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 4% பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை" என தெரிவித்தார். "அடையாற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.