ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது
கடந்த மாதம் ஒடிசாவின் பாலசோரில் 293க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) நேற்று(ஜூலை 7) கைது செய்தது. இந்த விபத்தில் குற்றவியல் சதி உள்ளதா என்பதை கடந்த சில வாரங்களாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்களான மூத்த பிரிவு பொறியாளர்(சிக்னல்) அருண் குமார் மஹந்தா, பிரிவு பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். குற்றமற்ற கொலை செய்ததாகவும், ஆதாரங்களை அழித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மூவரின் செயல்களால் தான் விபத்து ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்டது அல்ல, மாறாக மனித தவறினால் ஏற்பட்டது
இவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களது நோக்கம் இல்லை என்றாலும், அவர்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை அறிந்தே செய்திருக்கிறார்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. "விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்திருந்தால் அவர்கள் மீது கொலை வழக்கு போடப்பட்டிருக்கும்" என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த வாரம், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஒடிசா ரயில் விபத்து, தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்டது அல்ல, மாறாக மனித தவறினால் ஏற்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.