'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வெளியான பிறகு அவர் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.கவை கடுமையாக சாடிய அவர், "அவர்கள் எங்கள் கதையை முடிக்க திட்டமிடுகிறார்கள்" என்று கூறினார். "அவர்கள் எங்களை நசுக்க விரும்புகிறார்கள், ஆனால் ஆம் ஆத்மி கட்சி என்பது ஒரு கொள்கையாகும். அவர்கள் எங்கள் கதையை முடிக்க முயற்சித்தால் அது அதே அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கும்" என்று கெஜ்ரிவால் இன்று கூறினார். பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறியாளர்களாக இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
' பாஜக தலைவர்களின் சிறகுகளை வெட்டும் பிரதமர் மோடி'
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியது குறித்து பேசிய அவர், வளர்ந்து வந்த பாஜக தலைவர்களின் சிறகுகளை வெட்டும் வேலையை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்வதாக அவர் கூறினார். "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி செய்யும் முதல் வேலை, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாற்றுவதாகத்தான் இருக்கும்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். அத்வானி, முரளி ஜோஷி,சிவராஜ் சவுகான், வசுந்தரா ராஜே, கட்டார், ராமன் சிங் ஆகியோரின் (பாஜக தலைவர்கள்) அரசியல் முடிந்து விட்டது. அடுத்தது யோகி ஆதித்யநாத் தான். அவர்(பிரதமர் மோடி) வெற்றி பெற்றால் உ.பி முதல்வரை ஒரு மாதத்தில் மாற்றிவிடுவார்" என்று அவர் கூறினார்.