
ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.
எஸ்பிஐ வங்கிக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக விளங்கி வருகிறது எச்டிஎஃப்சி வங்கி. இந்த வங்கியுடன் எச்டிஎஃப்சி நிறுவனத்தை இணைக்கும் முடிவு, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை 1-ம் தேதி, இரு நிறுவனங்களும் முழுவதுமாக இணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்டிஎஃப்சி
இரு நிதி நிறுவனங்களின் இணைப்பு:
இந்த இணைப்பிற்கு முன்னதாக, ஜூன் 30-ம் தேதி இரு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக தங்கள் நிறுவனத்தின் கடைசி இயக்குநர் குழு சந்திப்பை நிகழ்த்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இணைப்பிற்கு பிறகு ஒருங்கினைந்த எச்டிஎஃப்சி வங்கியின் 41% பங்குகள், எச்டிஎஃப்சி நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள் வசம் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய இரு நிறுவனத்தின் பங்குகளுமே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இரு நிறுவனங்களின் இணைப்பிற்குப் பின்பு ஜூலை 13-ம் தேதி எச்டிஎஃப்சி நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் இருந்து டீலிஸ்டிங்(Delisting) செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரு எச்டிஎஃப்சி நிதி நிறுவனங்களின் இணைப்பு, இந்திய வங்கி வரலாற்றிலேயே மிக முக்கியமான இணைப்பாகப் பார்க்கப்படுகிறது.