LOADING...
தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2025
01:39 pm

செய்தி முன்னோட்டம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ளார். சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள வறிய குடும்பங்கள், ஆதரவற்றோர், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் போன்றோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசால் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரேஷன் பொருட்கள்

கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் அறிக்கை விபரம்

இந்தத் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்கும் வகையில், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இல்லத்திற்கே சென்று வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் தகவல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்கப்பட வேண்டும் என்றும், திட்டப் பயனாளிகள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் அரசின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.