தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. டோம்பிவிலி எம்ஐடிசி வளாகத்தில் வியாழன் பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில், அடுத்தடுத்து பல பாய்லர்கள் வெடித்ததில் 60 பேர் காயமடைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் கூற்றுப்படி, அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பாய்லருக்குள் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதில் அதிக வினைத்திறன் மற்றும் நிலையற்ற பெராக்சைடுகளைப் பயன்படுத்தியிருக்கூடும் எனவும், அதன் காரணமாகவே வெடித்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை: தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை
வெடிவிபத்துக்கான சரியான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது. அறிக்கைகளின்படி, இரசாயனங்கள் நிரப்பப்பட்ட பல டிரம்கள் அடுத்தடுத்து வெடித்து, ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தியது. இந்த தீயினை அணைக்க எட்டு மணி நேரம் ஆனது என கூறப்படுகிறது. தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தொழிற்சாலையில் உள்ள பாய்லர், இந்திய கொதிகலன் விதிமுறைகள், 1950 இன் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதை மாநில தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை வெளிப்படுத்தியது.
விபத்து விவரங்கள் மற்றும் அதன் உடனடி பின்விளைவுகள்
நேற்று மதியம் 1:40 மணியளவில் முதல் வெடிப்பு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து மேலும் பல பாய்லர்கள் வெடித்து சிதறின. அந்த நேரத்தில், பத்து ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்துள்ளனர்: மேலாளர், ஆறு தொழிலாளர்கள் மற்றும் மூன்று காவலாளிகள். பாய்லர் வெடிப்புகளால் கண்ணாடிகள் உடைந்து 4 கிமீ சுற்றளவில் சிதறி, கூரைகள் சேதமடைந்தன. இது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஒரு சிலருக்கு படுகாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்த ஆம்பர் கெமிக்கல் கம்பெனி, எம்.கே.ஜி., மெட்ரோபாலிட்டன் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கும் தீ பரவியதால், அப்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. விபத்து நடந்த இடத்திற்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டு, அரசு சார்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.