ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாக தகவல்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜே.எம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள், ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த சீன ஆயுதங்கள், பாடிசூட் கேமராக்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருவதாக உளவுத்துரை தகவல் அளித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு ட்ரோன்கள், கைக்குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை சீனா அனுப்பி வருவதாகவும், இந்த ஆயுதங்களை தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு நடத்தப்பட்ட மூன்று பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களிலும் சீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க ராணுவம் நடவடிக்கை
கடந்த வியாழக்கிழமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச்-ரஜோரி செக்டார் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க ராணுவம் கூடுதல் படைகளை வரவழைக்க உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. துருப்புக்களின் பலத்தை அதிகரிப்பதன் மூலம் அப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் திட்டம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது.