LOADING...
மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 
மாநிலம் முழுவதும் நடந்த கடும் வன்முறைகளால் இதுவரை 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 

எழுதியவர் Sindhuja SM
May 09, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

மணிப்பூரில் கடந்த வாரம் நடந்த கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடந்த வன்முறைகளால் தற்போது, அந்த வடகிழக்கு மாநிலம் முழுவதும் பதட்டமான அமைதி நிலவி வருகிறது. வன்முறையில் சுமார் 230 பேர் காயமடைந்தனர் என்றும், 1,700 வீடுகள் எரிக்கப்பட்டது என்றும் மணிப்பூரின் முதல்வர் என் பிரேன் சிங் நேற்று கூறி இருந்தார். மேலும், மாநிலம் முழுவதும் நடந்த கடும் வன்முறைகளால் இதுவரை 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம், மணிப்பூரில் சுமார் 30 பழங்குடியின குழுக்களுக்கும், பழங்குடியினரல்லாத மெய்த்தே இனத்தவருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று கூறி இந்த வன்முறை போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

details

ஏன் மெய்த்தே சமூகத்தினரை ST பட்டியலில் சேர்ப்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு?

சிறுபான்மை மலைவாழ் சமூகத் தலைவர்கள், மெய்தே சமூகம் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது நியாயமற்றது என்றும் கூறி இருந்தனர். மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53%பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சமூகத்தினர், மணிப்பூர் பள்ளத்தாக்கில் வசிப்பதோடு, "மியான்மர் மற்றும் வங்காளதேசியர்களின் பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால்" அவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டத்தின்படி மலைப்பகுதிகளில் மெய்த்தே சமூகத்தினர் குடியேற அனுமதி இல்லை. இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் பழங்குடியின மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அணிவகுப்பை நடத்தினர். இதனையடுத்து, அம்மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.