கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு
செய்தி முன்னோட்டம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை. தமிழ்நாடு முழுவதிலும் பொங்கல் வாசனை வீசும் போது, இந்தக் கிராமத்தில் மட்டும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்காக அடுப்புகள் பற்றவைக்கப்படுவதில்லை. ஆறு தலைமுறைகளாகப் பொங்கல் பானை வைக்காத ஒரு விசித்திரமான, அதே சமயம் அழுத்தமான பாரம்பரியத்தை இந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
அபசகுனம்
100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த அபசகுனம்
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, இந்தக் கிராம மக்கள் வழக்கம் போலப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கினர். அப்போது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. பொங்கல் பானையில் அரிசியிட்டு அது பொங்கி வரும் என்று காத்திருந்தபோது, பானை பொங்கவே இல்லை. ஆனால், பானைக்குக் கீழே இருந்த அடுப்பு மட்டும் வழக்கத்திற்கு மாறாக அதீத வெப்பத்துடன் தகித்திருக்கிறது. அரிசி வேகுவதற்கு முன்பே அடுப்பு தகித்ததையும், பானை பொங்கி வழியாததையும் அந்த மக்கள் ஒரு பெரிய அபசகுனமாக அல்லது தெய்வக் குற்றமாக கருதினர்.
அம்மன் கோபம்
உச்சிமாகாளி அம்மன் கோபமும் முன்னோர்களின் தடையுமும்
கிராமத்தில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் தை மாதத் திருவிழாவின் போதுதான் முதலில் பொங்கல் வைக்கப்பட வேண்டும் என்பது ஊர் வழக்கம். ஆனால், மக்கள் கோவிலுக்கு முன்னதாகத் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்ததால்தான் அம்மன் கோபமடைந்து அந்த அபசகுனத்தை ஏற்படுத்தியதாக மக்கள் நம்பினர். "ஊர் செழிக்க வேண்டும் என்றால், பானை பொங்கி வழிய வேண்டும்; ஆனால் அடுப்பு மட்டும் தகித்தது அழிவின் அறிகுறி" என்று அஞ்சிய முன்னோர்கள், அன்று முதல் வீடுகளில் பொங்கல் வைப்பதைத் தடை செய்தனர்.
சிங்கிலிபட்டி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம்
கீழயபிள்ளையூர் போலவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்திலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடப்படவில்லை. அங்கு பல வருடங்களுக்கு முன்பு, பொங்கல் பிரார்த்தனைக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை நாய் ஒன்று தின்ற சம்பவத்தை கிராம மக்கள் தீய சகுனமாக நினைத்தனர். கூடவே, அடுத்தடுத்த வருடங்களில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களின்போதும் விவரிக்க முடியாத வகையில் கால்நடைகள் இறந்த சம்பவங்களும் தொடர்ந்ததால், ஊர் மக்கள் கூட்டாக முடிவெடுத்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை நிறுத்தியுள்ளனர்.