நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்
மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் செயலாளருமான ஸ்மிதா சபர்வாலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரை தெலுங்கானா அரசு இன்று(ஜன 23) பதவி நீக்கம் செய்தது. துணை தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து மேட்சல் மல்காஜ்கிரி மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவு பிறப்பித்தார். தற்போது சஞ்சல்குடா மத்திய சிறையில் துணை தாசில்தார் ஆனந்தகுமார் ரெட்டி(48) அடைக்கப்பட்டிருக்கிறார். வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த உத்தரவை செயல்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஜனவரி 19 இரவு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று தான் இது வெளிச்சத்திற்கு வந்தது. தெலுங்கானா முதல்வரின் செயலாளரான ஸ்மிதா, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் ஒரு வில்லாவில் வசித்து வருகிறார்.
ஜனவரி 19 அன்று நடந்த சம்பவத்தின் விவரங்கள்
சம்பவத்தின் போது, துணை தாசில்தார் ஆனந்தகுமார் ரெட்டி அத்துமீறி ஸ்மிதாவின் வீட்டிற்குள் இரவு 11.30 மணியளவில் நுழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன் வீட்டிற்குள் திடீரென ஒரு ஆளை பார்த்ததும் ஸ்மிதா பாதுகாப்பு அதிகாரிகளை வர சொல்லி சத்தம் கொடுத்திருக்கிறார். அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஆனந்தகுமாரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது அத்துமீறி நுழைந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டின் வெளியே காரில் காத்திருந்த ஆனந்த்குமார் ரெட்டியின் நண்பர் கே.பாபுவையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனந்த் ரெட்டி மற்றும் பாபு இருவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.