தெலுங்கானா அமைச்சர்கள் சம்பளத்தில் 50% குறைப்பு; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக ரேவந்த் ரெட்டி அரசின் முடிவு
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா மாநிலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான நீண்டகால நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள அம்மாநில அமைச்சரவை அதிரடி முடிவெடுத்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க இமாச்சலப் பிரதேச அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் இந்த முன்னுதாரணமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, "ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்குவதற்காக, அமைச்சர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் பாதியை (50%) விட்டுக் கொடுக்கத் முன்வந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
விரிவாக்கம்
மக்கள் பிரதிநிதிகளுக்கும் விரிவுபடுத்த வாய்ப்பு
அமைச்சர்களை தொடர்ந்து, தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளும் தங்களது சம்பளத்தில் 50 சதவீதத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்று பல ஆண்டுகளாக பணப்பலன்களுக்காக காத்திருக்கும் முதியவர்களுக்கு நிதியுதவி செய்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். சமீபத்தில் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிதிப் பற்றாக்குறை காரணமாகத் தங்களது சம்பளத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அதே பாணியில் தெலுங்கானா அரசும் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களைத் திரட்டி, அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தச் சம்பளக் குறைப்பு நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.