
70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து, புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை அறிவித்துள்ளது.
இதனால் அந்நிறுவன ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
70 சதவிகித ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் சம்பள உயர்வு அறிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனம், மீதமுள்ள 30 சதவிகித ஊழியர்களுக்கு அவர்களின் செயல்த்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களான 6 லட்சம் பேரில் 4 லட்சம் பேருக்கு 100% வேரியபள் பே தொகையும் வழங்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களின் சம்பளத்திலும் 10-20% வேரியபில் பே தொகையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கவை.
9,840 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்த டிசிஎஸ்
கடந்த காலாண்டில் ரூ.10,431 கோடி லாபம் ஈட்டியது டிசிஎஸ் நிறுவனம்
கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.10,431 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு போன்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை அளித்துள்ளது.
மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேரியபில் பே தொகையை குறைத்துள்ள சூழலில், டிசிஎஸ் நிறுவனம் 100 சதவிகித தொகையை ஊழியர்களுக்கு கொடுத்திருப்பது அங்கு பணிபுரிவோர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்த ஜூலை-செப்டம்பரில் புதிதாக 9,840 பேருக்கு வேலைவாய்ப்பினை டிசிஎஸ் வழங்கியுள்ளது,
அதன்படி, தற்போது மொத்தம் 6,16,171 பேர் இந்நிறுவன ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.