வெளிச்சந்தையில் 7000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: 3-வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்வாரியம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வரவிருக்கும் மாதங்களில் ஏற்படக்கூடிய மாலை நேர உச்சபட்ச மின்தேவையைத் தடையின்றி சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 3-வது குறுகிய கால டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 7 மாத காலத்திற்கு மாதம் 1,000 மெகாவாட் வீதம் மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய டெண்டர்கள்
மாலை நேர உச்சகட்ட தேவையும் கொள்முதல் விவரமும்
தமிழகத்தில் மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சபட்ச மின் பற்றாக்குறையைத் தவிர்க்க, தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 7 மாத காலத்திற்குத் தடையில்லா மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் இறுதி வரை 4,500 மெகாவாட் மின்சாரத்திற்கும், 2027 கோடைக்காலத் தேவையை ஈடுகட்ட 15,000 மெகாவாட் மின்சாரத்திற்கும் என இரண்டு தனித்தனி டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன.
தற்போது மாலை நேரத் தேவைக்காக மட்டுமே பிரத்யேகமாக 3-வது டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளதால், வரவிருக்கும் மாதங்களில் மின்வெட்டு அபாயமின்றி சீரான மின்சாரம் பொதுமக்களுக்கும் தொழில்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.