தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்
உத்தரப்பிரதேசம், லக்னோவை சேர்ந்தவர் நரேஷ் குப்தா, இவர் 1973ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுர மாவட்டம் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டம் 1984ல் தனியாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1985ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் தனி மாவட்டமாக செயல்பட துவங்கியது. இதன் முதல் ஆட்சியராக பொறுப்பேற்றார் நரேஷ் குப்தா. அதனை தொடர்ந்து அவர் ஆளுநரின் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தார். தொடர்ந்து அவர் 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையும், 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 2009ம் ஆண்டு இவர் முதன்முறையாக வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவினை கண்காணிக்கும் முறையினை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.
உடல்நல குறைவால் நேற்று(ஏப்ரல்.,10) காலமானார்
கிட்டத்தட்ட தமிழகத்தில் 8 ஆண்டுகள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த இவர், நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தின்போது, அதாவது 20ஆண்டுகளுக்கு முன்னரே தற்போதைய அதிநவீன தேர்தல் முறைகளுக்கு அடித்தளமிட்டவர் இவர் என்று கூறலாம். கடந்த 2010ம்ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற இவர், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 5ம்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து 73வயதான நரேஷ் குப்தா சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்ரல்.,10) மாலை காலமானார். நரேஷ் குப்தாவின் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.