இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!
2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் உள்ள தரவின்படி, இந்தியாவில் அதிகம் கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.87,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது தமிழக அரசு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலமாக நிதி திரட்டியிருக்கின்றன மாநில அரசுகள். தமிழகத்தைத் தொடர்ந்து ரூ.72,000 கோடி கடனுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், ரூ.63,000 கோடி கடனுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது. இப்படி பெறப்பட்ட கடனை தமிழக அரசு மூலதன விரிவாக்கத் திட்டங்களுக்கு செலவழித்திருப்பதாகவும், இதனால் கடன் வாங்குவதன் தரம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.