LOADING...
2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்
2026-27 கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றம்

2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 24, 2025
03:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மாநிலக் கல்விக் கொள்கையின் (State Education Policy) அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இந்தப் புதிய தகவலைத் தெரிவித்தார். மாணவர்கள் புரிதலுடன் படிப்பதற்குத் தேவையான பாடத்திட்டங்கள் குறித்து வல்லுநர் குழுவுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழகத்தின் தனித்துவமான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய பாடத்திட்ட உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சி

ஆசிரியர்களுக்கான பயிற்சி

பாடத்திட்ட மாற்றம் குறித்து மட்டுமல்லாமல், புதிய பாடத்திட்டத்தை பள்ளி மாணவர்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கப் போகிறோம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார். இந்தத் திட்டமானது, தமிழகக் கல்வி முறையில் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருவதுடன், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழகத்திற்கென ஒரு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.