நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; 48 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா எச்சரித்துள்ளார். இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடல் பகுதிகளில் தற்போது மூன்று தனித்தனி சுழற்சிக் மண்டலங்கள் ஒருங்கிணைந்து வருவதாகவும், இதன் தாக்கத்தால் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதாகவும் அமுதா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, குறிப்பாகத் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிக அதிக மழை பதிவாகியுள்ளது.
மழை
வரும் நாட்களில் மழை தீவிரமடைய வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திலும் இந்த மழைத் தீவிரம் தொடரும். தென் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கு மிதமான மழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 26ஆம் தேதி தென் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல் மற்றும் போக்குவரத்துத் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள்
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
ஆழ்கடலில் கடல் அலைகள் உயர்வாகவும், காற்றின் வேகம் அதிகரிக்கும் சூழ்நிலையும் காணப்படுவதால், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு அமுதா வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தெற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கேரளா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.