விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு குறித்த உத்தரவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15 அன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.20,000 ஆக இருந்ததது தற்போது ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்காக ஓய்வூதியம் ரூ.11,000இல் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டோரின் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000இல் இருந்து ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.