தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்
தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரின் இந்த திடீர் கைது, திமுக வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து, நேற்று(ஜூன்.,13) காலை அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்க துறை சோதனை செய்து செய்தனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்திலும், சென்னையில் பசுமைவழி சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
நேற்று இரவு முடிந்த அந்த சோதனையின் இறுதியில், செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர், விசாரணைக்கு தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து, அமலாக்கதுறையினர் வளாகத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அமலாக்க துறையினர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அவர் எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த திடீர் கைதை திமுக பிரதிநிதிகளும், முதலமைச்சர் ஸ்டாலினும் வலுவாக கண்டித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து, கரூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.