மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச்சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் குழு, ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச்செல்லும் வீடியோ, 2 தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்களை இழுத்து சென்றது மட்டுமின்றி, அந்த ஆண்கள் குழு, அவர்களை, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, சுமார் 35கிமீ தொலைவில் உள்ள, பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம், கடந்த மே மாதம் 4-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதற்கு முந்தைய நாள் தான், அதாவது, மே 3-ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியினர் கண்டனம், ஆளும் கட்சி மௌனம்
மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு எதிர்க்கட்சியினர் பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இது தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் காத்துவருவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்மந்தமாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், "மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.