அமெரிக்க பயணம் வெற்றி; ரூ.7,600 கோடி முதலீட்டுடன் தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) சென்னை வந்தடைந்தார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டுவருவதற்காக 17 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். அங்கு சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவன உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மொத்தம் 18 நிறுவனங்களுடன் சுமார் 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையெழுத்திடப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சிகாகோவில் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற முதல்வர், தனது பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது தமிழகம் திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.