இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN Alert என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு எளிதாக வானிலை தகவல்களை வழங்கும் திட்டம்
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் நிகழ்நேரத்தில் வழங்கிட TN Alert என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. பொதுமக்கள் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், மழைப் பொழிவு மற்றும் பெய்யும் மழையின் அளவு, ஏரி மற்றும் அணைகளில் உள்ள நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். வெள்ளத் தடுப்பு பணிகளில் அனைவரும் இணைந்து ஓரணியில் செயல்பட வேண்டும் என அப்போது வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டுகளில் அவ்வாறு மேற்கொண்டதாலேயே இழப்புகள் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.