தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
தமிழ்நாடு அரசு தமிழ்மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, 2024ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2023ம் ஆண்டின் 74 தகுதியான அறிஞர்கள் விருதுக்கும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழக அரசு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையின் கீழ், பாரதியார் விருது, திருவள்ளுவர் விருது, பாரதிதாசன் விருது, திருவிக விருது, காமராஜர் விருது, அண்ணா விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுவோருக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, 1 பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இலக்கிய மாமணி பிரிவில் 3 பேருக்கு விருதுகள்
இதனைத்தொடர்ந்து இலக்கிய மாமணி பிரிவில் விருது பெறும் 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, 1 பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை அடிப்படையில் அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது உள்ளிட்ட விருதுகளை பெறும் அறிஞர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, தங்கப்பதக்கம் ஆகியன வழங்கப்படுமாம்.
தமிழ்த்தாய் விருது பெறும் அறிஞர்களுக்கான பரிசு விவரங்கள்
அதேபோல் தமிழ்த்தாய் விருது பெறும் அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம், 1 கேடயம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும். சி.பா.ஆதித்தனார் விருது பெறும் 3 பேருக்கு கேடயம், ரூ.2 லட்சம், தகுதியுரையுடன் பொன்னாடை வழங்கப்படும். மாவட்டந்தோறும் தலா ஒரு நபர் என்னும் அடிப்படையில் 38 பேருக்கு தமிழக செம்மல் விருது வழங்கப்படுமாம். அவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், தகுதியுரையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ய இணையதள முகவரி
இது போன்று மொத்தம் 75 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியான அறிஞர்கள் http://awards.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் அல்லது தமிழ்வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி கழக இயக்ககம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை-8 என்னும் முகவரிக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழக அரசு கூறியுள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்களில் அணுகலாம்
மேலும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் மேற்கூறிய இணையத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சந்தேகங்கள் இருந்தால் அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 உள்ளிட்ட தொலைபேசி எண்களை அணுகி, அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.