சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்; முதல்வர் இரங்கல்
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ எனப் பல்வேறு கவிதை வடிவங்களில் முத்திரை பதித்த அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஈரோடு தமிழன்பன், 'வணக்கம் வள்ளுவ' என்ற அவரது நூலுக்காக 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஆவார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறுகதை மற்றும் புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், திறனாய்வாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பல துறைகளில் தடம்பதித்த பன்முக ஆளுமை கொண்டவர்.
பொறுப்புகள்
ஈரோடு தமிழன்பன் வகித்த பொறுப்புகள்
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியதுடன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார். மேலும், வானம்பாடி கவிதை இயக்கத்தில் முக்கியப் பங்களிப்பாளராகச் செயல்பட்ட இவர், 'அரிமா நோக்கு' ஆய்விதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பனின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மரபுக் கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் சிறந்து தமிழுக்கு வளம் சேர்த்தவர் என்று புகழாரம் சூட்டிய முதல்வர், அவர் கலைமாமணி, சாகித்ய அகாடமி உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்தவர் என்று நினைவு கூர்ந்தார்.