ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்: வேலூரில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களை வைத்து, தினமும் 2500 லிட்டர் பால் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. ஆவின் என்பது பண்ணை வைத்திருப்பவர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமாகும். சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தின் மூலம் தினமும் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கொள்முதல் செய்யப்பட்ட பால், தினமும் 20 வாகனங்கள் மூலம் 600 முகவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அலுவலகத்திலிருந்து, வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு 76 லிட்டர் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களாகவே ஆவினில் பால் திருடப்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்தன. சில மாதங்களுக்கு முன், ஆற்காடு அருகே உள்ள திமிரி வழித்தடத்திற்கு பால் எடுத்து சென்ற வாகனம் பால் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திருட்டை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, ஆவின் அலுவலகங்களை அதிகாரிகள் இன்னும் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். இந்நிலையில், நேற்று அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருத்த போது, வேலூர் அலுவலகத்தில் ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களில் பால் ஏற்படுவதை அவர்கள் கவனித்தனர். தற்போது, அந்த வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வேன்கள் மூலம் தினமும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.