வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் நியூஸ்! ஏப்ரல் 16 வரை தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இடையில் ஏப்ரல் தொடக்கத்தில் பெய்த மழை சற்று குளிர்ச்சியைத் தந்தாலும், மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, ஏப்ரல் 16 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு
மாவட்டம் வாரியாக மழை வாய்ப்புகள்
ஏப்ரல் 10 & 11: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏப்ரல் 12: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 13 & 14: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 15 & 16: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை நீடிக்கக்கூடும்.
எச்சரிக்கை
3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பம்
மழை ஒருபுறம் இருந்தாலும், அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிக வெப்பத்துடன் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால், ஒருவிதமான அசௌகரியமான சூழல் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை மற்றும் மீனவர்களுக்கான தகவல்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்பதால், அவர்கள் தாராளமாகக் கடலுக்குச் செல்லலாம். மழை பெய்யும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.