LOADING...
ரிலீசுக்கு முன்பே வெளியான 'ஜனநாயகன்' முழு படம்! விக்கிப்பீடியாவிலும் மர்ம லிங்குகள்
'ஜனநாயகன்' HD பதிப்பு இணையதளங்களில் கசிந்துள்ளது

ரிலீசுக்கு முன்பே வெளியான 'ஜனநாயகன்' முழு படம்! விக்கிப்பீடியாவிலும் மர்ம லிங்குகள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2026
09:53 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மற்றும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்', தணிக்கை சான்றிதழ் சிக்கல்களால் இன்னும் திரையரங்குகளுக்கே வராத நிலையில், அதன் உயர்தர (HD) பதிப்பு இணையதளங்களில் கசிந்துள்ள செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று 'ஜனநாயகன்' படத்தின் டைட்டில் கார்டுகள், விஜய்யின் அறிமுகக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தடுத்து நிறுத்த தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் தீவிரமாக முயன்று, பல லிங்குகளை நீக்கி வந்தது. இருப்பினும், தற்போது முழுத் திரைப்படமும் இணையதளங்களில் வெளியாகி இருப்பது படக்குழுவினரின் அனைத்து முயற்சிகளையும் வீணாக்குவதாக அமைந்துள்ளது.

விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவில் மர்மமான லிங்குகள்

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 'ஜனநாயகன்' படத்தின் அதிகாரப்பூர்வ விக்கிப்பீடியா பக்கத்திலேயே படத்தின் கசிந்த பதிவிற்கான லிங்குகள் பதிவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவை மர்மமான வைரஸ் அல்லது ஹேக்கிங் செய்யக்கூடிய அபாயகரமான லிங்குகளாகவும் இருக்கலாம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய செயல்கள் படத்தின் ரிலீஸை முடக்கும் ஒரு திட்டமிட்ட சதி என்று விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீதிமன்றப் போராட்டம் மற்றும் தணிக்கைக் குழுவின் (CBFC) கெடுபிடிகளால் ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்தப் படம் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தற்போது மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ள இப்படம், விஜய்யின் அரசியல் வருகைக்கு முந்தைய கடைசிப் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisement