அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை: வானிலை மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை
ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளுக்கான மழைக் கணிப்பு
ஆகஸ்ட் 17 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து ஆகஸ்ட் 18 அன்று செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும்.
ஆகஸ்ட் 19
ஆகஸ்ட் 19 அன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர மழை
ஆகஸ்ட் 19 ஆம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20 முதல் 22 வரை மழையின் அளவு படிப்படியாகக் குறையும்.
சென்னை
தலைநகர் சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
ஆனால் ஆகஸ்ட் 19 அன்று சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.