சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்; மழைக்கு வாய்ப்பா?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பை விட சுமார் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட சுமார் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு
அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்பு
வறண்ட வானிலைக்கு மத்தியில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏனைய தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்கும்.
ஜூலை 18 மற்றும் 19 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
அதேபோல, ஜூலை 20, மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.