வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் குட் நியூஸ்! மார்ச் 17 முதல் தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், இந்த மழை அறிவிப்பு மக்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே வெயில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டி சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டங்கள்
மழை பெய்யப்போகும் மாவட்டங்கள் எவை?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு இதோ: மார்ச் 14 & 15: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 16: நீலகிரி மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 17: தென்தமிழகம், வட உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 18 & 19: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 20: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தலைநகரில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், லேசான மேகமூட்டம் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.