ரெடியாகுங்க மக்களே! தமிழகத்தில் தீவிரமடைய போகிறது மழை; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகும் தருணம் வந்துள்ள அதேவேளையில், தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது.
மழை எச்சரிக்கை
மாவட்ட வாரியான மழை எச்சரிக்கை விவரங்கள்
இன்று, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 15, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.