பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிசம்பர் 20-இல் சிறப்பு டெட் தேர்வு: நாளை (அக்.27) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
செய்தி முன்னோட்டம்
பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பைத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. முதற்கட்டத் தேர்வு கடந்த ஜூலை மாதம் வெற்றி கரமாக நடத்தப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த இரண்டாம் கட்டத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால அட்டவணை
ஆன்லைன் விண்ணப்பத் தேதிகள் மற்றும் தேர்வு கால அட்டவணை
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அக்டோபர் 27, 2026 முதல் நவம்பர் 19, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 20 முதல் டிசம்பர் 22 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை எழுத விரும்புவோர் 01.09.2025 ஆம் தேதிக்கு முன்னதாகப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற தகுதி நிபந்தனையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மதிப்பெண் தகுதிகள்
டிசம்பர் 20-இல் நடைபெறும் தேர்வு மற்றும் மதிப்பெண் தகுதிகள்
இரண்டு தாள்களைக் கொண்ட இந்த சிறப்பு டெட் தேர்வு வரும் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இரண்டாம் தாள் காலையிலும், முதல் தாள் பிற்பகலிலும் தலா 3 மணி நேரத் தேர்வாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.
150 வினாக்கள் கொண்ட இத்தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60% (90 மதிப்பெண்கள்) பெற வேண்டும்.
பிசி, எம்பிசி பிரிவினர் 50% (75 மதிப்பெண்கள்) மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் 40% (60 மதிப்பெண்கள்) பெற வேண்டும்.
இந்த தேர்வுக்கான கட்டணமாக ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி கட்டாயம்
1.10 லட்சம் ஆசிரியர்கள் தகுதி பெற வேண்டிய கட்டாய நிலை
கடந்த ஜூலை 4-இல் நடைபெற்ற முதற்கட்ட முதல் தாள் தேர்வை 59,535 பேர் எழுதியதில் 47,682 பேர் (80.8%) தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் ஜூலை 5-இல் நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வை எழுதிய 1,60,929 பேரில் 61,153 பேர் (38.3%) மட்டுமே தகுதி பெற்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணியைத் தக்கவைத்துக் கொள்ளத் தற்பொழுது சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளதால், இத்தேர்வு பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.