தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணி துவங்கப்பட்டது. இந்த இணைப்பிற்கான கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பலன் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்த காரணத்தினால் இதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மின்வாரியம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று(ஜன.,30) வரை 2.34 கோடி மின் நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஓர் அறிவிப்பினை தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும்
மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என்னும் பட்சத்தில், இதற்கான கால அவகாசம் மேல்கொண்டு நீட்டிக்கப்படாது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனே இணைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு இணைக்க தவறும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட மின் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் மின் கணக்கெடுப்பு எடுத்து 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த முடியாமல் அதற்கான அபராதத்தையும் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.