
புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?
செய்தி முன்னோட்டம்
இதோ அதோ என்று நம்மிடம் போக்குக் காட்டிக்கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒருவழியாகக் கரையைக் கண்டந்துவிட்டது. இருந்தாலும், இன்னும் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க தொடங்கியதாகவும் சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு 3 மணியளவில் இந்த புயல் முழுமையாக கரையைக் கடந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதனால், சென்னையிலும் புதுச்சேரியிலும் பெரும் சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
சேதம்
புயலால் அடைந்த சேதங்கள்
புயலால் சென்னையில் மட்டும் சுமார் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுந்த மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்கவில்லை என்றும் கட்டப்பட்ட 16 சுரங்கப்பாதைகளும் நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.
இந்த புயலின் காரணமாக சென்னையில் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புயல் கரையைக் கடந்துவிட்டாலும் தமிழகத்தின் பல இடங்களில் மழையும் பலத்த காற்றும் இன்னும் இரண்டு நாளுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.