
காலாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு; தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு
செய்தி முன்னோட்டம்
காலாண்டு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (அக்டோபர் 6) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விரிவான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். பருவமழைக் காலத்தை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும். இதன்படி, ஆசிரியர்கள் மாணவர்களை மழையில் நனையாமல் இருக்க குடைகள் அல்லது மழைக்கோட்டுகளைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும், சைக்கிளில் வரும்போது சகதிகளில் வழுக்கி விழாமல் பாதுகாப்பாகப் பயணிக்கவும், இடி மின்னலின்போது மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, மாணவர்கள் சாக்கடை கால்வாய்கள் அல்லது மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் கவனமாகச் செல்ல வலியுறுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்பு
பள்ளி வளாகப் பாதுகாப்பு
தலைமை ஆசிரியர்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளில், மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பூட்டி வைப்பது, ஈரமான பள்ளிச் சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரம் வரை பள்ளி மாணவர்கள் செல்லாமல் தடுப்புகளை ஏற்படுத்துவது ஆகியவை அடங்கும். மேலும், பழுதடைந்த மின்சாதனப் பொருட்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். மின் சுவிட்சுகள் பாதுகாப்பாகவும், மழைநீர் படாதவாறும் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் இருப்பின், உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு சரிசெய்ய வேண்டும்.
சுகாதாரம்
சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு
சுகாதார ரீதியாக, பருவ கால மாற்றங்களால் வரக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை வழங்க வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். இந்த அறிவுரைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை அனைத்துக் கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.