LOADING...
இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

எழுதியவர் Sindhuja SM
Jul 26, 2024
06:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் 49 வயதான பள்ளி வேன் டிரைவர் ஒருவர் சாலையோரம் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி சுமார் 20 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். வண்டியை நிறுத்திய சில நிமிடங்களில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஓட்டுநரின் துணிச்சலான செயலை தமிழகமே பாராட்டி வருகிறது. மேலும், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் ஒரு பேருந்தில் ஓட்டுநர் மலையப்பன் சுயநினைவின்றி அமர்ந்திருக்கும் படம் சமூக வலைதளமான X-ல் வைரலாகி வருகிறது. ஜூலை 24 புதன்கிழமை அன்று, வெள்ளக்கோவில் ஏஎன்வி மெட்ரிக் பள்ளி மாணவர்களை அவர்களது வீடுகளில் விடுவதற்காக மலையப்பன் பேருந்தில் அழைத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.

தமிழகம் 

மலையப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார். அதே பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்த அவரது மனைவியும், சம்பவத்தின் போது அதே வேனில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் தருவாயிலும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த ஓட்டுநரின் வீரச் செயலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் பாராட்டியுள்ளனர். "தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும், பள்ளி மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவரது கடமை உணர்வு மற்றும் சுய தியாகத்திற்காக அவரை வணங்குகிறோம். அவர் தனது மனிதாபிமான செயலின் மூலம் தொடர்ந்து வாழ்வார்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மலையப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.