LOADING...
தமிழ்நாட்டில் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகிறதா?
ராஜ்மோகன் இன்று துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கவுள்ளார்

தமிழ்நாட்டில் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகிறதா?

எழுதியவர் Venkatalakshmi V
May 25, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கவுள்ளார்.

கத்திரி வெயில்

வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்

தமிழகத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களைத் தொடர்ந்து மே மாதத்திலும் வெயில் சதம் அடித்து ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நடப்பு ஆண்டின் அக்னி நட்சத்திரம் வரும் மே 28-ஆம் தேதிதான் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் இயல்பு நிலை திரும்ப சில நாட்கள் ஆகும் என்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. காலை 7 மணி முதலே வெயில் கொளுத்தத் தொடங்குவதால், பள்ளிச் செல்லும் சிறு குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

கோரிக்கை

பள்ளி திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை

முன்னதாக 2026-2027 புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. இதற்காக அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. புதிய சீருடைகள், பாடப்புத்தகங்கள் விநியோகம் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இருப்பினும், தற்போதைய அசாதாரண வானிலையைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள், மஜக முன்னாள் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் பல்வேறு பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

ஆலோசனைக் கூட்டம்

இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

இந்தக் கோரிக்கைகளின் பின்னணியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், வானிலை நிலவரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகளைத் திறப்பதா அல்லது தேதியைத் தள்ளி வைப்பதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் இறுதியான முக்கிய அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement