தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும், சுதந்திரத்தின் 'குறிப்பிடத்தக்க வரலாற்று' சின்னமான 'செங்கோல்' மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
"இந்த செங்கோல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகஸ்ட் 14, 1947அன்று இரவு 10.45 மணியளவில், பண்டிட் நேரு இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து பெற்றார். மேலும், பல மூத்த தலைவர்கள் முன்னிலையில், சுதந்திரத்தை அடைவதற்கான அடையாளமாக இதை ஏற்றுக்கொண்டார். இது ஒரு மாற்றத்தின் அடையாளம். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான சின்னம் இது" என்றும் அவர் கூறியுள்ளார்.
details
தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு: அமித்ஷா
இந்தியாவில், குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
"சோழ வம்சத்தின் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். பிரதமர் மோடி இந்த செங்கோலை ஏற்பார். அதன் பிறகு, அந்த செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படும்," என்று அவர் கூறினார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு முன், பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து செங்கோலை பெற்று, புதிய நாடாளுமன்ற பவனில் வைப்பார் என அமித்ஷா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திரத்தின் போது பெற்ற செங்கோல்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் வைக்கப்படும் என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.