அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர்கல்வித் துறை உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பேரிடர்களுக்கு முன்னரும், பின்னரும் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைச் செயலாளர் சங்கர், அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதில், புயல், மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில், கல்வி நிறுவனத்தின் தலைவர் தலைமையில் இந்தக் குழுவை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகள்
கல்லூரிகள் செய்ய வேண்டியவை
பேரிடர் காலங்களில் கல்லூரி நிர்வாகம் தயார் நிலையில் இருக்கக் கீழ்க்கண்ட விவரங்களைப் பராமரிக்க வேண்டும். முதலுதவி குழு: முதலுதவி குழு குறித்த விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அவசரகாலத் தொடர்பு: தகவல் தொடர்பு அலுவலர், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சை மையங்களின் தொடர்பு விவரங்களை வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை: கல்லூரிகளில் மின் சாதனங்கள் முறையாக உள்ளதா என்பதைச் சரிசெய்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மரங்கள் மற்றும் கட்டடங்கள்: வளாகங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை பேரிடர் மீட்புத் துறையின் உதவியுடன் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம், மழை மற்றும் புயல் காலங்களில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.