வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சனிக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை
அதிக கனமழை எச்சரிக்கை
இந்தச் சூழல் காரணமாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இந்த தென் மாவட்டங்கள் உட்பட மேலும் சில கடலோர மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.