ஆன்லைனில் SIR படிவங்களை இவர்களால் மட்டும்தான் சமர்ப்பிக்க முடிவும்; தேர்தல் ஆணையம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) ஒரு பகுதியாக, வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கு ஒரு முக்கிய நிபந்தனையைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலிலும் ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். தேர்தல் ஆணையம், வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளது. வாக்காளர்கள் தங்களது மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, ஓடிபி பெற்று உள்நுழையலாம். உள்நுழைந்த பிறகு, 'Fill Enumeration Form' என்ற இணைப்பைத் தேர்வு செய்யலாம்.
பெயர் தேடல்
உங்கள் பெயரைத் தேடுவது எப்படி?
2002 மற்றும் 2005ஆம் ஆண்டு தீவிர திருத்தப் பணியில் உள்ள வாக்காளர்கள், தங்கள் விவரங்களை https://www.voters.eci.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். முகப்புப் பக்கத்தில் 'Search your name in the last sir' என்பதைத் தேர்வு செய்து, பெயர் மூலம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் விவரங்களைத் தேடி மீட்டெடுக்கலாம். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, இணையப்பக்கம் e-sign முறைக்கு மாறும். அங்குப் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளீடு செய்தவுடன், படிவம் வெற்றிகரமாகப் பதிவேற்றப்படும். இந்த முறையின் மூலம் வாக்காளர்கள் ஆன்லைனில் SIR படிவங்களை சமர்ப்பிக்கலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.