Loading...
குறைந்த கட்டணத்தில் ஆம்னி பேருந்து டிக்கெட்: தமிழக பஸ் உரிமையாளர்கள் உருவாக்கிய 'Roamie' ஆப் வெளியீடு
தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உருவாக்கிய 'Roamie' ஆப் வெளியீடு

குறைந்த கட்டணத்தில் ஆம்னி பேருந்து டிக்கெட்: தமிழக பஸ் உரிமையாளர்கள் உருவாக்கிய 'Roamie' ஆப் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
07:07 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் ஆன்லைன் பயணச் சீட்டு முன்பதிவு நிறுவனங்களுக்கு வழங்கும் அதிகப்படியான கமிஷன் தொகையை குறைக்கவும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் பேருந்து டிக்கெட்டுகளை வழங்கவும் தமிழ்நாட்டின் பல்வேறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் ஒன்று சேர்ந்து ரோமி என்ற புதிய ஆன்லைன் முன்பதிவு தளத்தைத் தொடங்கியுள்ளன. சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சேவை, ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

'Roamie' செயலியின் சிறப்பம்சங்கள்

பயணிகள் பயன்பாட்டிற்காக இணையதளம் roamie.co.in மற்றும் மொபைல் செயலி என இரண்டு வடிவங்களிலும் 'ரோமி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தளத்தில் முதல்கட்டமாக தமிழ்நாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான சுமார் 1,000 ஆம்னி பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் பல்வேறு நிறுவனங்களின் பயணக் கட்டணங்கள், பயணச் சீட்டு வசதிகள், புறப்படும் நேரங்கள், பேருந்து வகைகள் மற்றும் இருக்கை வசதிகளை இத்தளத்தில் ஒரே நேரத்தில் ஒப்பீடு செய்து எளிதாக முன்பதிவு செய்யலாம்.

உரிமையாளர்களுக்குக் கமிஷன் செலவு குறைவதால், பயணிகளுக்கு வழக்கத்தை விடக் குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் டிக்கெட்டுகளை வழங்க இத்தளம் வழிவகை செய்கிறது.

ONDC கட்டமைப்பு

கொங்கு மண்டல பேருந்துகளுக்கு வரவேற்பு

மத்திய அரசின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி அமைப்பான ONDC தொழில் நுட்பத்துடன் இத்தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம், கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இத்தளத்தை உருவாக்கியுள்ளன.

குறிப்பாக கோவை மற்றும் மேற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிய அளவிலான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைய இத்தளம் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நாள்தோறும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இவற்றைப் பயன்படுத்திப் பயணம் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT