கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு
ஆன்லைன் மோசடியில், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) மூலம் பரிசுத் தொகையை வெல்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றிய மோசடி நபர்களிடம் ரூ.2.91 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது. முருகேசனிடம் ரூ. 5.6 கோடி பரிசு பெற்றதாகவும், ஆனால் பரிசுத் தொகையை பெறுவதற்கு முன்னர், அதற்குண்டான வரியை செலுத்த வேண்டும் என்று மோசடியாளர்கள் கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய முருகேசன், மோசடியாளர்களுக்கு ரூ.2.91 லட்சம் தொகையை செலுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மோசடியாளர்கள் முருகேசன் தங்களை நம்ப வைப்பதற்காக, நந்தினி ஷர்மா என்ற பெயரில் போலி சிபிஐ அதிகாரி போல் காட்டிக் கொண்டுள்ளனர்.
சிபிஐ வழக்கு பதிவு
மேலும், மோசடியாளர்கள் தாங்கள் காட்டிய ஆவணத்தில் பிரதமர் அலுவலக பெயரையும், பிரதமர் மோடியின் படத்தையும் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, சிபிஐ முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து சிபிஐயில் கொடுக்கப்பட்ட எப்ஐஆர் படி, "மோசடியாளர்கள் கேபிசி மும்பை, கேபிசி கொல்கத்தா ஆகியவற்றின் பிரதிநிதிகள் போல் காட்டிக் கொண்டு, முருகேசனுக்கு முதலில் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை கொடுப்பதாகக் கூறியுள்ளனர். பின்னர், பரிசுத் தொகையை ரூ.5.6 கோடியாக உயர்த்தியுள்ளனர். கேபிசி கொல்கத்தா பெயரில் மேலும் ரூ.2.75 கோடி பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளனர். வரித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எனக் கூறி, முருகேசனிடம் ரூ.2.91 லட்சம் பெற்றுள்ளனர்." எனக் கூறப்பட்டுள்ளது.