LOADING...
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2025
10:50 am

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24இல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பின்னர், மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

கனமழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இந்தச் சூழல் காரணமாக, சனிக்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.