
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்; முதல்வர் ஸ்டாலிடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு
செய்தி முன்னோட்டம்
இரு கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர். அதில் சாதி அடிப்படையிலான கௌரவக் கொலைகளைத் தடுக்கவும், சாதிகளுக்கு இடையேயான மற்றும் மதங்களுக்கு இடையேயான தம்பதிகளை வன்முறை மற்றும் சமூக துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கவும் ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர், தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகள் குறித்து மேற்கோள் காட்டினர்.
சமூக அவலம்
ஆணவக் கொலைகளை தடுக்க சட்டங்கள் போதுமானதாக இல்லை
இத்தகைய குற்றங்களுக்குப் பின்னால் உள்ள ஆழமாக வேரூன்றிய சமூக அவலங்களை சரிசெய்ய தற்போதுள்ள குற்றவியல் சட்டங்கள் போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறினர். 2010 ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணைய மாதிரி மசோதா, 242வது சட்ட ஆணைய அறிக்கை (2012) மற்றும் நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகள் உள்ளிட்ட கடந்தகால சட்டப் பரிந்துரைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கௌரவம் என்ற பெயரில் குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு பிரத்யேக சட்ட கட்டமைப்பை ஆதரிக்கின்றன. இந்தக் கொலைகளைத் துல்லியமாக வகைப்படுத்த, தரவுகளைச் சேகரிக்க அல்லது சரியான சாட்சி பாதுகாப்பு மற்றும் விரைவான விசாரணைகளை உறுதி செய்வதற்கான சட்ட வழிமுறைகள் இல்லாததையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்.