
வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தென்மேற்குப் பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்திலிருந்து, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் திசைவேக மாற்றத்தால், வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் சராசரியாக 2.1 செமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 19 செமீ, திருப்பத்தூரில் 17 செமீ, வாணியம்பாடியில் 15 செமீ மழை பெய்துள்ளது.
அதிகம்
தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம்
இதன் காரணமாக, தென்மேற்குப் பருவமழையின் ஒட்டுமொத்த அளவு இயல்பான அளவை விட 5% அதிகரித்து, 29.5 செமீ ஆகப் பதிவாகியுள்ளது. இது இயல்பை விடக் குறைந்து காணப்பட்ட மழை அளவை மீட்டெடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தமிழகத்திற்கு அதிக மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 26, 27 தேதிகளில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.