வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும்?
செய்தி முன்னோட்டம்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சுழற்சியின் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சியின் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டெல்டா மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களுக்கு நாளை எச்சரிக்கை
நாளைய தினத்தைப் பொறுத்தவரை (மே 12), தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கக்கூடும். வரும் மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாக இந்த மாவட்டங்களில் மழைப் பொழிவு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை
வெப்பநிலை குறைய வாய்ப்பு
மழைப் பொழிவு காரணமாக, மே 14-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இது கடந்த சில நாட்களாக நிலவி வந்த கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியை அளிக்கும். வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.