தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்குப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதே இந்தத் திடீர் மழை மாற்றத்திற்குக் காரணம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
கனமழை
ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் கனமழை பெய்யும் மாவட்டங்கள்
ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
மீனவர்கள்
மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் சூறாவளிக் காற்று அறிவிப்பு
தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 27 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதேபோலத் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.