புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறி இருந்தது. அதன் படி, திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் முடிவந்துவிட்ட நிலையில், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செய்லபடுத்த திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் விதிளின் படி, ஒவ்வொரு வீட்டிலும் தகுதி உள்ள ஒரு பெண்மணிக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். மேலும், உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கு முன் ஆண்டு வருமானம் உட்பட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
ஒரு நாளுக்கு 500 புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள்
இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதனையடுத்து, இதுவரை ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்காதவர்கள், பெயரை சேர்க்காதவர்கள் என்று பலரும் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனர். அரசு வெளியிட்ட தரவுகளின் படி, ஒரு நாளுக்கு 500 புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படுகிறதாம். இந்நிலையில், உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை புதிய ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்பங்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.